சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் மேயர் திடீர் ஆய்வு
சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் மேயர் திடீரென ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகள் கேட்டார்.
சிவகாசி,
சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் மேயர் திடீரென ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகள் கேட்டார்.
திருத்தங்கல்
சிவகாசி மாநகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி பகுதி சேர்க்கப்பட்ட பின்னரும், திருத்தங்கல் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்ற புகார்கள் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் திருத்தங்கல் பகுதியில் உள்ள மண்டலம் 1,2 ஆகியவைகளுக்கு போதிய அதிகாரிகள், அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மேயர் சங்கீதா இன்பம் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென திருத்தங்கல் பகுதிக்கு சென்ற சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் அங்குள்ள வார்டுகளை திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளை உடன் அழைத்து சென்றார்.
குடிநீர் வினியோகம்
சுகாதாரம், குடிநீர் வினியோகம் போன்ற பணிகளை தொய்வு இல்லாமல் செய்ய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். திருத்தங்கல் பகுதியில் கொசுமருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் எத்தனை பேர்? அவர்களில் எத்தனை பேர் பணிக்கு வந்துள்ளார்கள்? துப்புரவு பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? எந்தெந்த பகுதியில் துப்புரவு பணிகள் செய்யப்பட்டு வருகிறது என்று கேட்டறிந்தார்.
பின்னர் நாடார் பழனிச்சாமி வீதியில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்பகுதியில் வினியோகிக்கப்படும் தண்ணீரை பற்றி பெண்களிடம் கேட்டறிந்தார்.
மேயர் உறுதி
குறைகளை உடனுக்குடன் சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.
அதேபோல சிவகாசி மண்டலம் 3,4 பகுதிகளிலும் மேயர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் சக்திவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.