வேலை கிடைக்காததால் கொள்ளையனாக மாறிய எம்.பி.ஏ. பட்டதாரி கைது


வேலை கிடைக்காததால் கொள்ளையனாக மாறிய எம்.பி.ஏ. பட்டதாரி கைது
x

குமரி மாவட்டத்தில் வேலை கிடைக்காததால் கொள்ளையனாக மாறிய எம்.பி.ஏ. பட்டதாரி கைது செய்யப்பட்டார். திருடிய பணத்தில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது அம்பலமானது.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

குமரி மாவட்டத்தில் வேலை கிடைக்காததால் கொள்ளையனாக மாறிய எம்.பி.ஏ. பட்டதாரி கைது செய்யப்பட்டார். திருடிய பணத்தில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது அம்பலமானது.

நகை பறிப்பு

குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தில் கடந்த மே மாதம் 9-ந் தேதி இரவு நிறுத்தப்பட்ட பஸ்சில் கண்டக்டர் ஆக்கிலன் (வயது 37) என்பவர் பணப்பையை தலையில் வைத்துக்கொண்டு தூங்கினார்.

அப்போது நள்ளிரவில் மர்ம நபர் இந்த பணப்பையில் இருந்து ரூ.8 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஓடி விட்டார். இது குறித்து ஆக்கிலன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவந்தனர்.

இதேபோல் மணவாளக்குறிச்சி அருகே தருவையை சேர்ந்தவர் சாந்தம்மாள் (70). கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி இவர் வழக்கம்போல் இரவு வீட்டில் தூங்கிய போது மர்மநபர் வீடு புகுந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து சென்று விட்டார்.

பிரபல கொள்ளையன் கைது

இந்த இரு வழக்குகளிலும் துப்பு துலங்காமல் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் மணவாளக்குறிச்சி போலீசார் ரோந்து சென்ற போது பாலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த வாலிபர் களியக்காவிளை அருகே எஸ்.டி.மங்காடு புல்லானிவிளையை சேர்ந்த எட்வின் ஜோஸ் (32) என்பது தெரிய வந்தது.

மேலும் மேற்கூறிய 2 வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், மண்டைக்காடு, கருங்கல், மார்த்தாண்டம், களியக்காவிளை ஆகிய இடங்களில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்து 45 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

அதே சமயத்தில் ஆக்கிலனிடமிருந்து திருடிய ரூ.8 ஆயிரம் மீட்கப்படவில்லை.

எம்.பி.ஏ. பட்டதாரி

மேலும் கொள்ளையனாக மாறியது குறித்து கைது செய்யப்பட்ட எட்வின் ஜோஸ் போலீசாரிடம் கூறியதாவது:-

எஸ்.டி.மங்காடை சேர்ந்த நான் எம்.பி.ஏ. படித்துள்ளேன். அதற்கான வேலை கிடைக்கவில்லை. திருமணமும் ஆகவில்லை. எனக்கு சிறு வயதிலிருந்தே சொகுசாக வாழ ஆசை. தந்தை இறந்து விட்டார். அம்மாவும், ஒரு அண்ணனும் உண்டு. கடந்த 8 வருடமாக திருட்டு தொழிலில் ஈடுபட்டேன். திருடும் பணத்தில் சொகுசு விடுதியில் தங்கி, உயர் ரக உணவுகளைத்தான் சாப்பிடுவேன். ஒரு முறை நான் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது என்னை அம்மா ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார். வெளியே வந்த பின் செலவுக்கு பணமில்லாமல் தவித்தேன். இதனால் மீண்டும் திருட்டு தொழிலில் ஈடுபட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story