மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்து சிறப்புக்குழு ஆய்வு


மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்து சிறப்புக்குழு ஆய்வு
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்து சிறப்புக்குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு 2-வது நாளாக இன்றும் நடக்கிறது.

மதுரை

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்து சிறப்புக்குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு 2-வது நாளாக இன்றும் நடக்கிறது.

மீனாட்சி அம்மன் கோவில்

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால், தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதாலும், கொரோனா பரவல் காரணமாகவும் அந்த பணிகள் தடைப்பட்டது.

2023-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த வாய்ப்பு உள்ளதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

சிறப்பு குழு ஆய்வு

இந்தநிலையில் கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, தொல்லியல்துறை அதிகாரிகள் கொண்ட திருப்பணிக்கு ஒப்புதல் வழங்கும் மாநில அளவிலான நிபுணர்கள் குழு மீனாட்சியம்மன் கோவிலுக்கு நேற்று வந்தது. கோவில் துணை கமிஷனர் அருணாசலம், தொல்லியல்துறை ஆய்வாளர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோவிலில் புனரமைக்கப்பட வேண்டிய 50-க்கும் மேற்பட்ட பகுதிகளை கணக்கிடப்பட்டு ஆய்வு செய்தனர்.

குறிப்பாக சுவாமி சன்னதி, பொற்றாமரைகுளம், ஆயிரங்கால் மண்டபம், வீரவசந்த ராயர் மண்டபம், புதுமண்டபம், கோவிலின் மேற்பரப்பு, தங்க கோபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தினர். தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தின் சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

பக்தர்கள் மகிழ்ச்சி

இந்த சிறப்புக்குழு அளிக்கும் ஆய்வறிக்கையை பொறுத்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான விவரங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதனிடையே வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைப்பதற்கான பணிகளும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை மக்களின் நெடுநாள் எதிர்பார்ப்பான கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஆய்வுபணிகள் தொடங்கியுள்ளது. பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழுவினர் மீனாட்சி அம்மன் கோவிலில் இன்றும் (திங்கட்கிழமை) ஆய்வு நடத்த இருக்கின்றனர்.


Related Tags :
Next Story