தெள்ளை மலை கிராமத்திற்கு சாலை அமைக்க அளவீடு


தெள்ளை மலை கிராமத்திற்கு சாலை அமைக்க அளவீடு
x

கணியம்பாடி அருகே தெள்ளை மலை கிராமத்திற்கு சாலை அமைப்பதற்காக அளவிடும் பணி நடைபெற்றது.

வேலூர்

சாலைவசதி இல்லாத மலைக்கிராமம்

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இது மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் அவசர சிகிச்சைக்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

பிரசவ காலத்தில் பெண்களும் அவ்வாறே நடந்து சென்று வருவதாகவும், முடியாத நேரத்தில் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் மருத்துவமனை உள்ளிட்ட வெளியிடங்களில் இறந்துவிட்டால் அவரது உடலை கூட டோலி கட்டிதான் மலைகிராமத்திற்கு சுமந்து செல்கின்றனர்.

உயிரிழப்பு

பிரசவத்திற்காக டோலி கட்டி அழைத்துச்செல்லும்போது உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. கிராமத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் கிராமத்திற்கு வாகனம் செல்ல முடியாத சூழல் உள்ளது. துத்திக்காடு கிராமத்தில் இருந்து தெள்ளை மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் 10 இடத்தில் கானாறுகள் செல்கிறது.

ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு கிராம மக்கள் தலைமீது சுமந்தபடியே ஆற்றை கடந்து மலை பகுதிக்கு நடைபயணமாக செல்கின்றனர். தொடர் மழையின் காரணமாக தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால், மலை கிராம மக்கள் மிகவும் சிரமத்துடன் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

தீ பந்தம்

எப்போது மழை பெய்தாலும் இந்த கிராமத்திற்கு ஆற்றை கடந்து செல்வது மிகவும் சிரமமான காரியம். சுமார் 7 கிலோமிட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளது. கிராமத்திற்கு செல்லும் சாலையில் தெரு விளக்குகள் கூட இல்லை. இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி செல்கின்றனர்.

துத்திக்காடு கிராமத்தில் இருந்து மலை கிராமத்திற்கு செல்ல ஆறுகளை கடந்து செல்வதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. இந்த நிலையில் துத்திக்காடு முதல் தெள்ளை மலை கிராமம் வரை சாலை அமைத்துக்கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு, 3 அடி அகலத்தில் சாலையும், 9 இடங்களில் தரைப்பாலமும் அமைத்துக் கொள்ள வனத்துறையினர் மூலம் அனுமதியுடன் கூடிய தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.

அளவீடு பணி

சாலை அமைப்பதற்கு நபார்டுவங்கி திட்டத்தின் கீழ் நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கணியம்பாடி ஒன்றியக் குழு துணை தலைவர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பாபு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சாலை அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.

விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story