தென் மாவட்டங்களில் தொழில் துறை வளர்ச்சிக்கு நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
தென் மாவட்டங்களில் தொழில் துறை வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்
மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 98-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக சிறப்பு பேராசிரியர் சொக்கலிங்கம் இதயம் காக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் இன்னும் நூறாண்டு காலம் சிறப்புடன் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் தொழில்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகிறார்.
மின் கட்டண உயர்வு, மின்சார வினியோக நடைமுறைகள், சொத்துவரி உயர்வு ஆகியன குறித்து தொழில்துறையினர் கவலைப்படுகின்றனர். தமிழகத்தின் நிதி நிலைமையில் இருந்து இந்த உயர்வை பார்க்க வேண்டியுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் இருந்ததால், தற்போது பெரிதாக தெரிகிறது. நிதி நிலைமை சீரான பின்னர் விரைவில் இதில் மாற்றம் கொண்டு வரப்படும். அதற்காக தொழில்துறையினரின் கோரிக்கை கண்டும் காணாமல் போய்விடாது. நிச்சயமாக ஒவ்வொரு கூட்டத்திலும் நீங்கள் வலியுறுத்தும் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நிச்சயம் ஒரு நாள் கோரிக்கைகளுக்கான பலன் உங்களுக்கு கிடைக்காமல் விட்டுவிட மாட்டோம். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொழில்துறை வளர்ச்சியடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப பூங்கா, புதிய மென்பொருள் தொழிற்சாலை உள்ளிட்டவற்றுக்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் செல்வம், பொருளாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.