தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை


தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை
x

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை வேண்டும் என முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ.விடம், ஆசிரியர்கள் மனு அளித்தனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ.விடம், அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில், தலைமை ஆசிரியை விஜயபாரதி நேற்று முன்தினம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் 54 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். அதேபோல் 29 லட்சம் மாணவர்கள் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள மாணவர்களே அதிகம் படித்து வருகின்றனர். இதுநாள் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடநூல், பாடகுறிப்பேடுகள், சீருடை, சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றனர். அரசு பள்ளியில் படித்து, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கி வருகிறது.. இந்த வாய்ப்பும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கிடைக்கவில்லை. சென்னையில் அண்மையில் நடந்த செஸ் போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அனுமதிக்கப் படவில்லை. எனவே அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story