திருப்பத்தூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை


திருப்பத்தூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் காய்ச்சலை தடுக்க  நடவடிக்கை
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

குறைதீர்வுகூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 305 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிடம் நேரில் சென்று மனு வாங்கினார், அப்போது கொத்தூர் மற்றும் பச்சூர் பகுதியை சேர்ந்த 3 மாற்றுதிறனாளிகள் மனு அளித்தனர். அவர்களின் மனுக்களுக்கு 30 நிமிடத்தில் தீர்வு காணப்பட்டு 3 பேருக்கும் ரூ.25 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-

காய்ச்சலை தடுக்க நடவடிக்கை

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும். தீர்வு காணமுடியாவிட்டால் அதற்கான விளகத்தை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மனுக்களை கையில் வைத்துக் கொண்டு இருக்ககூடாது. இதற்காக சிறப்பு முகாம்களை அமைத்து தீர்வு காண வேண்டும்.

தற்போது மழைக்காலமாக உள்ளது. இதனால் மாவட்டத்தில் காய்ச்சல், டெங்கு போன்ற நோய்கள் வேகமாக பரவுகிறது. நான் முதற்கொண்டு அரசு அதிகாரிகள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கழுவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும். மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தனித்துனை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், உதவி ஆணையர் (கலால்) பானு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


விடுப்பு எடுக்கும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

கூட்டத்தில் பேசிய கலெக்டர் அமர்குஷ்வாஹா, அரசு அலுவலர்கள் வெள்ளிக்கிழமை அன்ற உடல்நலம் சரியில்லை என விடுப்பு எடுக்கின்றனர். வாரத்தின் கடைசிநாளில் உடல்நலம் சரியில்லை என விடுப்பு எடுப்பது அதிகரிக்கிறது. இதனை கைவிட வேண்டும். மற்ற நாட்களில் உடல்நலக்குறை ஏற்படுவதில்லை. வாரத்தின் கடைசிநாளில் மட்டும் உடல் நலம் பாதிப்பு என விடுமுறை எடுப்பவர்கள் பட்டியல் தயாரிக்கபடுகிறது என்றார். இதனால் அதிகாரிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.


Next Story