கோடை வெப்பத்தில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை
கோடை வெப்பத்தில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி தொழிலக பாதுகாப்பு, சுகாதார கூடுதல் இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
கோடை வெப்பத்தில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி தொழிலக பாதுகாப்பு, சுகாதார கூடுதல் இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை வெப்பம்
கோடை வெப்பத்தில் இருந்து தொழிற்சாலைகள் கட்டிடம் மற்றும் கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக ஒரு தொழிலாளருக்கு நாள் ஒன்றுக்கு 4½ லிட்டர் என்ற விகிதத்திலும், 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள் எனில் குளிர்ந்த குடிநீர் சட்டப்படி வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு தொழிலாளரும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். வெப்பம் அதிகம் உள்ள வெப்பஉலை, டயர் உற்பத்தி போன்ற தொழிற்சாலைகளில் 2 பேட்ச் தொழிலாளர்கள் கொண்டு ஒன்று அல்லது இரண்டு மணிநேர வேலை சுற்றிற்கு பிறகு ஓய்வு எடுக்க அருகில் ஓய்வு அறை அமைக்கப்பட வேண்டும்.
வேலை நேரத்தை மாற்ற வேண்டும்
நேரடியாக சூரியஒளியில் வேலை செய்யும் கட்டுமான தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். சுத்தமான போதுமான குடிநீர் மற்றும் கூடுதலாக எலக்ட்ரோலைட் கலந்த நீரும் வழங்கப்படுவதுடன் வெப்பஅலை அதிகம் இருப்பின் போதுமான இடைவெளியில் தொழிலாளர்களுக்கு ஓய்வு அளித்து வேலை நடைபெற வேண்டும்.
இதை அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனத்தினர் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.