போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க நடவடிக்கை
போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று விழிப்புணர்வு முகாமில் போலீஸ் துணை சூப்பிரண்டு பேசினார்.
கூடலூர்,
போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று விழிப்புணர்வு முகாமில் போலீஸ் துணை சூப்பிரண்டு பேசினார்.
விழிப்புணர்வு முகாம்
கூடலூர் தாலுகா தேவர்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடலூர் காவல்துறை சார்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டின் வருங்கால சக்திகளான மாணவர்கள் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சி, சமூக ஒற்றுமை, தேச பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல பழக்க வழக்கங்கள், கடமை உணர்வு, நேர்மை, துணிவு மிக்க சமுதாயமாக உயர வேண்டிய மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
தீவிரமாக ஈடுபட்டுள்ளது
போதைப்பொருட்களை ஒழிப்பது மற்றும் போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தமிழக அரசும், காவல்துறையும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே, மாணவர்கள் தங்களது சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் விழிப்புடன் இருப்பது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் தேவர்சோலை பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி மோகன் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
போட்டிகள்
முன்னதாக பள்ளிகளில் காவல்துறையின் கடமை பற்றிய ஓவிய போட்டி, மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு குறித்த கட்டுரை போட்டிகளும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.