தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை


தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை
x

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் தடையின்றி குடிநீர் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நகரமன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

நகராட்சி கூட்டம்

வாணியம்பாடி நகராட்சி கூட்டம் நகரமன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மாரிசெல்வி முன்னிலை வகித்தார். பொறியாளர் சங்கர் வரவேற்றார். கூட்டத்தில் 132 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் நடைபெற்ற வாதங்கள் வருமாறு:-

உறுப்பினர் நாசீர்கான்:- சிறு பாலங்கள் கட்ட டெண்டர் விடப்பட்டு பல நாட்கள் ஆகியும் இன்னும் பணிகள் தொடங்கவில்லை. ஒப்பந்ததாரர்கள் பணிகளை செய்யா விட்டால் அவர்களுக்கு ஏன் பணிகள் ஒதுக்க வேண்டும்.

கலைச்செல்வன்:- நியூ டவுன் சி.என். சாலை பழுது அடைந்துள்ளது. சாலைகளை உடனடியாக அமைக்க ஒப்பந்ததாருக்கு உத்தரவிட வேண்டும்.

நாய்கள் தொல்லை

சித்ரா:- குடிநீர், வீட்டு வரி உள்ளிட்ட நகராட்சி கட்டண ரசீதுகளில் கோவிந்தாபுரம் என்பதற்கு பதிலாக அம்பலான் தெரு என்று குறிப்பிடப்பட்டு வருகிறது. மீண்டும் கோவிந்தாபுரம் என்று குறிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.முஹம்மத் அனீஸ்:- நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடித்து காட்டுப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைகாலத்தில் நகராட்சி பகுதியில் தடை இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையாளர்:- நாய்களை பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த பணிகள் நடைபெற உள்ளது.

தங்கு தடையின்றி குடிநீர்

பத்மாவதி:- எனது வார்டு பகுதியில் உள்ள பழைய ஆழ்துளை கிணறுகளை அப்புறப்படுத்தி மின்விசை பம்ப் அமைத்து தர வேண்டும், அனைத்து தெருக்களிலும் மழை நீர் கால்வாய் அமைத்துத்தர வேண்டும்.

பல்கீஸ் சலீம்:- சுண்ணாம்புக்கார் தெரு, தாதேமியா ஆகிய தெருக்களில் பேவர் பிளாக் சாலை, 4 சிறுபாலங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளுக்காக கடந்த மே மாதம் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்னும் பணிகள் தொடங்கவில்லை.

தலைவர்:- உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக அமைக்கப்பட உள்ள சாலைகள், இதர பணிகள் மின்விளக்குகள் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் பணிகள் மேற்கொள்ளப்படும். கோடை காலத்தில் நகராட்சி பகுதியில் எவ்வித தடையுமின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.சாரதி குமார், மா.பா.சாரதி, ரஜினி, தவுலத், பஷீர் அஹமத், பி.முஹம்மத் அனீஸ், பிரகாஷ், ஆஷாபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.


Next Story