ஆக்கிரமிப்பிலுள்ள அரசு நிலங்களை மீட்டு வேலி அமைக்க நடவடிக்கை:மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பிலுள்ள அரசு நிலங்களை மீட்டு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் ஆக்கிரமிப்பிலுள்ள அரசு நிலங்களை மீட்டு வேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்டவருவாய் அலுவலர் கண்ணபிரான் தெரிவித்தார்.
விவசாயிகள் புகார்
தூத்துக்குடி மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், திருவரங்கநேரி கீழ குளத்தில் இருந்து புளியங்குளம் குளம் வரை அளவீடு செய்து தூர்வார வேண்டும். மேலசெக்காரகுடி பகுதியில் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு தரிசு நில மேம்பாடு திட்டத்தின் கீழ் தென்னை, மா கன்றுகளை வழங்க வேண்டும். மருதூர் மேலக்கால்வாயை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
உடன்குடி பகுதியில் புதிய குளம் அமைக்க வேண்டும். விளாத்திகுளம் அருகே மார்த்தாண்டம்பட்டியில் வைப்பாறில் உள்ள மணல் குவாரியில் விதிகளை மீறி மணல் அதிகமாக அள்ளப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர்.
அரசு நிலங்களை மீட்டு...
இதற்கு பதில் அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு நிலங்களையும் அளவீடு செய்து, ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்டு வேலிகள் அமைத்து பாதுகாக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதில் 50 சதவீதம் செலவிடப்பட்டு உள்ளது. நீர் நிலைகள் மட்டுமின்றி அனைத்து அரசு நிலங்களும் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் மீட்கப்பட்டு வேலி அமைத்து பாதுகாக்கப்படும். உடன்குடி பகுதியில் புதிய குளம் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை. மேல செக்காரக்குடியில் உளுந்து, பாசிப்பயிர்களை அரசு சார்பில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு பல்வேறு மானிய திட்டத்தின் கீழ் பழமரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மருதூர் மேலக்கால்வாயை விரிவாக்கம் செய்வது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.