65 கிலோ இறைச்சி பறிமுதல்


65 கிலோ இறைச்சி பறிமுதல்
x
சேலம்

சேலத்தில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த 65 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இறைச்சி பறிமுதல்

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று சூரமங்கலம் மற்றும் அஸ்தம்பட்டி மண்டல பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சுகாதாரமற்ற நிலையில் கடைகளில் திறந்த நிலையில் தொங்க விடப்பட்டிருந்த 16 கிலோ ஆட்டு இறைச்சி, குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 45 கிலோ ஆட்டு இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர, சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கோழி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் சமார் 65 கிலோ இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர்.

3 கடைகளுக்கு சீல்

இதனை தொடர்ந்து சுகாதாரமான முறையில் இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும் எனவும், இறைச்சியை கடைக்கு வெளியில் சுகாதாரமற்ற நிலையில் தொங்க விடக்கூடாது எனவும், துருபிடிக்காத கம்பியில் மட்டுமே இறைச்சிகளை தொங்கவிட வேண்டும் என்று இறைச்சி கடை வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், பணியாளர்கள் அனைவரும் கையுறை, தலையுறை, ஏப்ரான் அணிந்து பணியாற்ற வேண்டும். கண்ணாடி கூண்டில் அல்லது கண்ணாடி போன்ற ஷீட் கொண்டு கவர் செய்து இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதேசமயம், உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெறாத 3 இறைச்சி கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story