திருவாரூரில் இறைச்சி கடைகளுக்கு படையெடுத்த மக்கள்


திருவாரூரில் இறைச்சி கடைகளுக்கு படையெடுத்த மக்கள்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:45 AM IST (Updated: 17 Jan 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் மாட்டு பொங்கல் பண்டிகையான நேற்று இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆடு, மீன்களை விட கோழி இறைச்சி விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

திருவாரூர்

திருவாரூரில் மாட்டு பொங்கல் பண்டிகையான நேற்று இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆடு, மீன்களை விட கோழி இறைச்சி விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் திருநாள்

தமிழராய் பிறந்த அனைவருக்குமே உரித்தான பண்டிகை பொங்கல். பொங்கல் திருநாள் 3 நாட்கள் மகிழ்வுடன் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற முதுமொழிக்கேற்ப, அடுத்தநாள் புத்தாடை அணியப்போகும் முன்பு, வீட்டில் உள்ள பயனற்ற பழைய பொருட்களை கழித்த நாள்தான் போகி பண்டிகை. இந்த ஆண்டு போகி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

2-ம் நாளான நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை அன்று புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கல் வைத்து பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடினர்.

3-ம் நாள் மாட்டுப்பொங்கலான நேற்று விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்து விவசாயியின் உயர்வுக்கும், மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணமிட்டு, புதுக்கயிறு கட்டி, நெற்றியில் திலகமிட்டு, பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகை அன்று அனைவரும் கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளில் குலதெய்வங்களுக்கு படையலிட்டு வழிபடுவார்கள். இதனால் அன்றைக்கு யாரும் அசைவம் சாப்பிடமாட்டார்கள். அடுத்த நாள் மாட்டு பொங்கல் அன்று வீட்டிற்கு வந்த விருந்தினருடன் இறைச்சி சமைத்து சாப்பிடுவார்கள்.

இதனால் நேற்று இறைச்சி விற்பனை அதிகமாக இருந்தது. நேற்று திருவாரூர் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மொத்த விற்பனை கடைகளுக்கு இணையாக சில்லறை கடைகளிலும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. திருவாரூரில் நேற்று ஆட்டிறைச்சி ரூ.800-க்கு விற்பனையானது. ஆட்டுக்கால், ரத்தம் என அதன் பாகங்களுக்கு ஏற்ப சில்லறை விலையில் ரூ.60 முதல் ரூ.250 வரை விற்பனையானது.

விலையை பொருட்படுத்தவில்லை

1 கிலோ கோழி இறைச்சி ரூ.230-க்கு விற்பனையானது. காடை ரூ.45-க்கு விற்பனையானது. மீன் கடைகளை காட்டிலும் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகளவில் இருந்தது.

இதுகுறித்து இறைச்சி கடை வியாபாரிகள் கூறுகையில், திருவாரூருக்கு, மன்னார்குடி, முடிகொண்டான், கும்பகோணம், குடவாசல் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து இறைச்சிக்காக ஆடுகள் கொண்டு வரபடுகின்றன.

வழக்கமாக சாதாரண நாட்களில் ஓட்டல்களுக்கு கொடுக்க வேண்டியதை சேர்ந்து 5 முதல் 7 ஆடுகளே வெட்டப்படும். ஆனால் பொங்கலுக்கு மறுநாளான நேற்று 30 முதல் 40 வரையிலான ஆடுகள் வெட்டப்பட்டுள்ளன. விலை சற்று அதிகரித்தாலும் அதனை பொருட்படுத்தாமல் இறைச்சியை வாங்கி செல்கிறார்கள்.

பிராய்லர் கோழி இறைச்சி

நாட்டுக்கோழிகளை விட பிராய்லர் கோழி இறைச்சியை தான் அதிகம்பேர் விரும்பி வாங்குகின்றனர். ஆட்டிறைச்சி விலையை விட கோழி இறைச்சி விலை குறைவு என்பதால் ஆட்டை விட கோழியை தான் அனைவரும் விரும்புகின்றனர் என்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சமைப்பது எளிது, சுவை போன்ற காரணங்களால் பிராய்லர் கோழி இறைச்சியை வாங்குகிறோம். 4 கிலோ கோழி இறைச்சியின் விலையும், 1 கிலோ ஆட்டிறைச்சியின் விலையும் ஒரே விலை தான். இதனால் ஆட்டை விட கோழியை அதிகம் வாங்குகிறாம் என்றனர்.


Next Story