சாலையோரம் குவிந்து கிடக்கும் இறைச்சி கழிவுகள்
கொள்ளிடம் அருகே சாலையோரம் இறைச்சி கழிவுகள் குவிந்த கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே சாலையோரம் இறைச்சி கழிவுகள் குவிந்த கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம்-சீர்காழி சாலை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் இருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தண்ணீர்பந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. குடியிருப்புகளும் நிறைந்துள்ளன. அங்கு உள்ள பள்ளிக்கு எதிரில் சாலையோரம் கோழி, ஆடு, மாடு போன்ற இறைச்சி கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
இறந்த பூனை, நாய் போன்ற விலங்குகளின் உடல்களும் அங்கு தொடர்ந்து வீசப்படுகின்றன. இறைச்சி கழிவுகள் மூட்டை, மூட்டையாக கட்டப்பட்டு அங்கு வீசப்படுவதால், கழிவுகள் தேக்கம் அதிகரித்து துர்நாற்றம் வீசுகிறது. தினந்தோறும் இரவு நேரங்களில் சிலர் சாக்கு மூட்டைகளில் அழுகிய இறைச்சி கழிவுகளை கட்டி கொண்டு வந்து அங்கு போட்டு விட்டு செல்கிறார்கள். சாலையோரத்தில் 200 மீட்டர் தூரத்துக்கு இறைச்சி கழிவுகள், எலும்புகளாக காட்சி அளிக்கிறது என்பதும், துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் நடந்து செல்ல கூட முடியவில்லை என்பதும் அந்த பகுதியை சேர்ந்த மக்களின் வேதனையாக உள்ளது.
இதுகுறித்து தண்ணீர்பந்தல் கிராம மக்கள் கூறியதாவது:-
சகித்துக்கொள்ள முடியவில்லை
சாலையோரம் இறைச்சி கழிவுகளை தினசரி வீசி செல்கிறார்கள். சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதி முழுவதும் அருவருப்பாக காட்சி அளிக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சுவாசம் சம்பந்தமான நோய்களும் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இங்கு இரவு நேரங்களில் சிலர் இறைச்சி கழிவுகளை வீசி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கடந்த 5 மாத காலமாக தினமும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. பல வகையான கழிவுகள் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. இங்குள்ள குடியிருப்புகளை சேர்ந்த மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கண்டுகொள்ளவில்லை
பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தினசரி இந்த பகுதியை கடந்து தான் சென்று வருகிறார்கள். இவ்வாறு கழிவுகளை கொட்டுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை. நெடுஞ்சாலை என்பதால் இந்த வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்களில் செல்பவர்கள் இந்த பகுதிக்கு வந்த உடன் முகம் சுழிக்கிறார்கள்.
சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரிக்க இவ்வாறு இறைச்சி கழிவுகளை கொட்டுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். குவிந்து கிடக்கும் இறைச்சி கழிவுகளை அகற்றவும், இங்கு தூய்மை பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.