தீபாவளிக்கு ஜவுளி எடுக்க சென்ற மெக்கானிக் விபத்தில் பரிதாப சாவு
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் மெக்கானிக் இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். தீபாவளிக்கு ஜவுளி எடுக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் மெக்கானிக் இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். தீபாவளிக்கு ஜவுளி எடுக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மெக்கானிக்
தென்காசி அருகே சிவராம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ் என்ற பேச்சிமுத்து (வயது 20). அதே தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் முருகேசன் (20). புளியங்குடி செல்வவிநாயகர் கோவில் தெருவில் குடியிருக்கும் லட்சுமணன் மகன் பழனி (20).
3 பேரும் புளியங்குடியில் தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் 3 பேரும் நேற்று வேலைநேரம் முடிந்ததும் புளியங்குடியில் இருந்து ஒரே ேமாட்டார்சைக்கிளில் கடையநல்லூருக்கு தீபாவளி ஜவுளி எடுப்பதற்காக புறப்பட்டனர்.
விபத்தில் பலி
நேற்று இரவு 8 மணியளவில் சொக்கம்பட்டி சந்தன மாரியம்மன் கோவில் அருகே உள்ள வளைவில் வந்தபோது தென்காசியில் இருந்து உத்தமபாளையம் நோக்கி சென்ற லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். 2 பேரையும் கடையநல்லூரில் முதல் உதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சொக்கம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார், இறந்துபோன பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து லாரி டிரைவர் உத்தமபாளையம் வடபுதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் நாகராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.