ஆற்றில் மூழ்கி மெக்கானிக் பலி
திருவட்டாரில் பரளியாற்றில் குளிக்கச் சென்ற மெக்கானிக் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
திருவட்டார்:
திருவட்டாரில் பரளியாற்றில் குளிக்கச் சென்ற மெக்கானிக் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
மெக்கானிக்
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் அருகில் வசித்து வந்தவர் மதுசூதனன் நாயர் (வயது 52), மெக்கானிக். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.
மதுசூதனன் நாயர் தினமும் காலையில் திருவட்டார் பாலத்தின் கீழ் பகுதியில் ஓடும் பரளியாற்றில் குளிக்கச் செல்வது வழக்கம்.
தண்ணீரில் மூழ்கினார்
இந்தநிலையில் மதுசூதனன்நாயர் நேற்று காலையும் வழக்கம்போல் பரளியாற்றின் படித்துறை அருகில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மதுசூதனன் நாயர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். அருகில் குளித்துக் கொண்டிருந்த ஜெகதீசன் என்பவர் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இதுபற்றி மதுசூதனன் நாயரின் வீட்டாருக்கு தெரிவித்தார். அவர்கள் அங்கு ஓடிவந்து பார்த்தனர். இதையடுத்து திருவட்டார் போலீசாருக்கும், குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீவிரமாக தேடினர்
திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள், குலசேகரம் தீயணைப்பு அலுவலர் செல்வ முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் பரளியாற்றில் இறங்கி மதுசூதனன் நாயரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், அவர் மூழ்கிய பகுதியில் ஆழம் அதிகமாக இருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்றுவதற்காக பாலத்தின் கீழே ஆற்றில் போடப்பட்டிருந்த கற்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
பிணமாக மீட்பு
இதுபற்றி தகவல் அறிந்த பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், திருவட்டார் தாசில்தார் தினேஷ் சந்திரன், இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர், கிராம நிர்வாக அதிகாரி மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியை முடுக்கி விட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் சுமார் 3 மணிநேர தேடுதலுக்கு பிறகு 15 அடி தொலைவில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடந்த மதுசூதனன் நாயரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து திருவட்டார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதுகுறித்து மதுசூதனன்நாயரின் மருமகன் தீபு கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் குளிக்கச் சென்ற மெக்கானிக் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.