குறுவை நெற்பயிரில் வெளிர்மஞ்சள் நிறத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


குறுவை நெற்பயிரில் வெளிர்மஞ்சள் நிறத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை பகுதியில் குறுவை நெற்பயிரில் வெளிர்மஞ்சள் நிறத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை உதவி வேளாண் இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை பகுதியில் குறுவை நெற்பயிரில் வெளிர்மஞ்சள் நிறத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை உதவி வேளாண் இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெளிர் மஞ்சள் நிறம்

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்களில் ஒரு சில இடங்களில் நெற்பயிர்கள் நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையினால் வெளிர்ந்து வெளிர் மஞ்சள் நிறமாக பயிர்கள் காணப்படுகிறது. இவற்றை சரி செய்திட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், நெல் நுண்ணூட்ட உரம் இடுவதினால் இதனை கட்டுப்படுத்திடலாம். இந்த நெல் நுண்ணூட்ட உரத்தில் துத்தநாகம் 3 சதவீதம், மக்னீசியம் 4 சதவீதம், இரும்பு, மாங்கனீசு தலா 0.3 சதவீதம், போரான் 0.2 சதவீதம், தாமிரம் 0.4 சதவீதம் ஆகியவை உள்ளன.

நெல் நடவு வயலில் ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து மேலாக இட்டு உடன் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நுண்ணூட்ட உரத்தை மேலாக இடும்போது அதிலுள்ள நுண்சத்துக்கள் உடன் பயிருக்கு கிடைத்து விடும். அவ்வாறு இல்லாமல் நுண்ணூட்ட உரத்தை இட்டப்பின் உழவு செய்தால் அந்த நுண் சத்துக்கள் பயிருக்கு கிடைக்காத ஆழத்துக்கு சென்று வீணாகி விடும்.

ஏக்கருக்கு 5 கிலோ...

மேலும் நடவு வயலில் இட முடியாத விவசாயிகள், நடவு செய்து 10 நாட்கள் வரை ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணுரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து நடவு வயலில் இடலாம். நெல் நுண்ணூட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நெல் நுண்ணூட்ட உரம் விவசாயிகளிடையே மிகவும் விரும்பப்படும் ஒரு உரமாக உள்ளது.

நுண்ணூட்ட சத்து உரம் இடுவதால் ஏற்படும் நன்மைகளை விவசாயிகள் அனுபவ ரீதியாக உணர்ந்து விட்டதால் அவர்கள் விரும்பி வந்து அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பெற்று பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு இருப்புவைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வரப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story