மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற தயாராக வேண்டும் -கவர்னர்


மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற தயாராக வேண்டும் -கவர்னர்
x

மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற தயாராக வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை,

பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் பள்ளி மாணவி நந்தினி மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் காயத்ரி, தவசியம்மாள், மோனிஷா, மாணவர் விஷ்ணு வரதன், சைதாப்பேட்டை பள்ளி மாணவிகள் செம்மொழி அரசி, எம்.மோனிஷா மற்றும் நாமக்கல் கிருஷ்ணவேணி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்ற திருநங்கை ஸ்ரேயா ஆகியோருடன் கவர்னர் நேற்று கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்தது.

அப்போது அவர், ஒவ்வொரு மாணவ, மாணவிகளிடமும் அவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் எந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க உள்ளனர், வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என விரும்புகிறீர்கள் என்பது குறித்து கேட்டார்.

நீட் தேர்வு

அதற்கு மாணவ-மாணவிகள், ஆடிட்டர், டாக்டர், வக்கீல், ஐ.ஏ.எஸ்., தொழில்துறை என தாங்கள் சாதிக்க விரும்பும் துறையை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கவர்னர், தாங்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறப்புடையவர்களாக திகழ வேண்டும் என பாராட்டு தெரிவித்தார்.

'சி.ஏ. எனப்படும் ஆடிட்டர் படிப்பை தேர்ந்தெடுத்தால் மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது என்றும், நீட் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. அரசு கல்லூரிகளில் மட்டுமே மிக குறைவான கட்டணத்தில் மருத்துவ படிப்பை மேற்கொள்ள முடியும்.

மற்றபடி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளை படிக்க வேண்டுமென்றால் அதிகம் செலவாகும். எனவே, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் தயாராக வேண்டும்' என அறிவுறுத்தினார்.

இதன்பின்பு சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் கேடயம் வழங்கி பாராட்டினார். சாதனைக்கு காரணமாக இருந்த ஆசிரியர்களை பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

விழாவில் கவர்னர் செயலாளர் (பொறுப்பு) உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கவர்னர் மாளிகையில் தங்க வைக்கப்பட்ட சாதனை மாணவி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷப்ரீன் இமானா 600-க்கு 590 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். அவர், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தார். கவர்னர் அழைப்பு விடுத்த சாதனை மாணவிகள் பட்டியலில் இடம்பெற்ற ஷப்ரீன் இமானா நேற்று முன்தினம் சென்னை வந்தார்.

மாணவியின் சாதனையை ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய விருந்தினர்கள் தங்கும் கவர்னர் மாளிகையில் ஷப்ரீன் இமானாவும் தனது குடும்பத்தினருடன் தங்குவதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்தார். அதன்படி, மாணவி ஷப்ரீன் இமானா குடும்பத்துடன் கவர்னர் மாளிகையில் தங்கி கவர்னரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதுகுறித்து மாணவி ஷப்ரீன் இமானா கூறும்போது, 'இது, எதிர்பாராதவிதமாக நடந்த நிகழ்வு. முக்கிய விருந்தினர்கள் மட்டுமே தங்கும் கவர்னர் மாளிகையில் என்னையும், எனது குடும்பத்தினரை தங்க வைத்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக கவர்னருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.


Next Story