மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம்
x

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டார்.

பெரம்பலூர்

மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமினை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பார்வையிட்டார். முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர்களான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்கள், அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்களுக்காக பரிந்துரை செய்தனா். உரிய ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் முகாமிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரசுத்துறைகளின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சா் சிவசங்கர் பார்வையிட்டார். முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி, ஒரு மாணவருக்கு ரூ.2.02 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக்கூடிய சர்க்கர நாற்காலிகளையும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், முகாமிற்கு வருகை தந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மஞ்சள் பைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளக்க கையேடுகளையும் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 16 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 401 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 33 ஆயிரத்து 918 மதிப்பிலான உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா். இதில் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. நிறைமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை), பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 20-ந்தேதி ஆண்டி குரும்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 21-ந்தேதி சின்னவெண்மணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.


Next Story