தனியார் ஸ்கேன் மையத்தில் மருத்துவ இணை இயக்குனர் 'திடீர்' ஆய்வு


தனியார் ஸ்கேன் மையத்தில் மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு
x

தனியார் ஸ்கேன் மையத்தில் ஆய்வு செய்த மருத்துவ இணை இயக்குனர், கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிய தடை உள்ள நிலையில் ஸ்கேன் மையங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

தனியார் ஸ்கேன் மையத்தில் ஆய்வு செய்த மருத்துவ இணை இயக்குனர், கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிய தடை உள்ள நிலையில் ஸ்கேன் மையங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திடீர் சோதனை

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா கண்டறியும் தடை செய்யும் சட்டம் உள்ளதை மீறுவதாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் மையங்கள் மீது புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து ஸ்கேன் மையங்களில் சோதனை நடத்த மருத்துவ துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

பாலினம் ஆணா பெண்ணா என ஸ்கேன் செய்வது நமது மாவட்டத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். எங்களுக்கு புகார் வரும் பொழுது நாங்கள் ஆய்வு செய்யும்போது விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து நமது மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் மையங்களுக்கு வருகின்ற தாய்மார்களுக்கு மருத்துவர்கள் கண்டிப்பாக ஸ்கேன் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சட்ட சிக்கல்

அதுபோன்று செய்வதாக இருந்தால் கிராம சுகாதார செவிலியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 944 பெண் குழந்தைகள் என்ற விகிதம் இருப்பதால் இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வு நடைபெற்றால் பெரும் சட்ட சிக்கல்கள் ஏற்படும். எனவே அனைத்து மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் மையங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மேலும் தாய்மார்களுடைய நாமினல் ரிஜிஸ்டரில் அவருடைய அனைத்து தகவல்களும் தவறாமல் இடம் பெற வேண்டும்.

எனவே விதி மீறலில் செயல்படும் ஸ்கேன் மையங்களில் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story