கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
சிங்கம்புணரி,
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
மருத்துவ முகாம்
சிங்கம்புணரி ஒன்றியத்துக்குட்பட்ட ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 24-வது மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜ், துணைத்தலைவர் சிகப்பாயி ராஜா ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ திட்டம் ஏழை, எளியோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டான 2021-2022 வரை 36 முகாம்கள் நடத்தப்பட்டு அதன்மூலம் 22 ஆயிரத்து 278 பேர் பயனடைந்தனர். நடப்பாண்டான 2022-23-ல் 36 முகாம்கள் நடத்திட திட்டமிட்டு தற்போது வரை 24 முகாம் நடந்துள்ளது.
உரிய சிகிச்சை
இதய நோய், சிறுநீரகம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு, மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட காசநோய் கணக்கெடுப்பில் தீவிர காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு காசநோய் தொற்று விகிதம் குறைந்துள்ளதாக தமிழகத்தில் 8 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக சிவகங்கை மாவட்டத்தில் காசநோய் பிரிவு சிறப்பான பணியை மேற்கொண்டதன் அடிப்படையில் தமிழக அரசால் ரூ.2 லட்சம் பரிசு தொகையும் பெற்றுள்ளது.
மருத்துவ காப்பீடு
இந்த தொகை மூலம் ஏழு இரு கண் நுண்ணோக்கிகள் பெறப்பட்டு அவை சிங்கம்புணரி, திருப்பத்தூர், திருப்புவனம், மானாமதுரை ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கும், காளையார்மங்கலம், கண்ணங்குடி, எஸ்.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது என்றார். தொடர்ந்து 15 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவ பெட்டகங்கள் மற்றும் 5 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையும் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், துணை செயலாளர் முத்துக்குமார், துணை இயக்குனர் சுகாதாரத்துறை ராம் கணேஷ், காசநோய் ராஜசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சசிகுமார், உதயசூரியன், வட்டாட்சியர் கயல் செல்வி, சிங்கம்புணரி வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சர்மிளா மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.