மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்; தேனி உள்பட 8 இடங்களில் நடக்கிறது


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்; தேனி உள்பட 8 இடங்களில் நடக்கிறது
x
தினத்தந்தி 8 Jan 2023 10:51 PM IST (Updated: 8 Jan 2023 11:03 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் தேனி உள்பட 8 இடங்களில் நடக்கிறது.

தேனி

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் தேனி உள்பட 8 இடங்களில் நடக்கிறது.

மருத்துவ முகாம்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மருத்துவ முகாம் வருகிற 11-ந்தேதி தொடங்கி, பிப்ரவரி 15-ந்தேதி வரை நடக்கிறது.

வட்டார அளவில் மாவட்டத்தில் 8 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது. அதன்படி வருகிற 11-ந்தேதி கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியிலும், 20-ந் தேதி தேனி பி.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது. 25-ந்தேதி பெரியகுளம் எட்வர்டு நினைவு நடுநிலைப்பள்ளி, பிப்ரவரி 1-ந்தேதி மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, 3-ந்தேதி உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, 8-ந்தேதி சின்னமனூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, 10-ந்தேதி ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 15-ந்தேதி போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.

நலத்திட்டங்கள்

இந்த முகாம்களின் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான புதிய தேசிய அடையாள அட்டை, பழைய தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்களில் பயணம் செய்ய சலுகை சான்றிதழ், ரெயிலில் பயணம் செய்ய சலுகை சான்றிதழ், தேவையான அறுவை சிகிச்சை மேற்கொள்வது, தகுதி வாய்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் அசல், ஆதார் அட்டை, கல்வி பயிலும் சான்று, புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story