வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் செங்கோடம்பாளையம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன்காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 1996-ம் ஆண்டு 4-வது முறையாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார். மருத்துவமனையில் மட்டுமே டாக்டர்கள் பணிபுரிவதோடு அல்லாமல் கிராமப்புறங்களுக்கும் சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்கள் பயனடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று டாக்டர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், கண்ணொளி காப்போம் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடிகளையும் அமைச்சர் வழங்கினார். இதில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் நாகராஜ், செங்கோடம்பாளையம் ஊராட்சி தலைவர் சரஸ்வதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story