ஊரக வளர்ச்சி பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
ஜோலார்பேட்டையில் ஊரக வளர்ச்சி பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து நிலை பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் வரவேற்றார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, டாக்டர் சுமன் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து நிலையிலான பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் பொது பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளித்தனர். இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.