மருந்துக்கடைகளில் அதிகாரிகள் குழு ஆய்வு
போதை மாத்திரைகள் விற்பனை புகார் எதிரொலியாக நேற்று திருப்பூர் மாநகரில் மருந்துக்கடைகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினார்கள். இதில் 2 மருந்துக்கடைகள் மூடப்பட்டது.
மருந்துக்கடைகளில் சோதனை
திருப்பூர் மாநகரில் சமீபகாலமாக போதை தரும் மாத்திரைகளை மருந்துக்கடைகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போதை இளைஞர்கள் 2 பேர், கொங்கு மெயின் ரோட்டில் மருந்துக்கடை உரிமையாளரிடம் போதை மாத்திரை கேட்டு தொந்தரவு செய்ய, மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் வழங்க முடியாது என்று கூறியதால் ஆத்திரத்தில் அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக வடக்கு போலீசார் 2 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் மாநகரில் உள்ள மருந்துக்கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இணைந்து நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் மற்றும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் 3 மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் கொண்ட 3 தனிப்படையினர் இணைந்து கொங்கு மெயின் ரோடு, ராம்நகர், பி.என்.ரோடு, சாமுண்டிபுரம், கேத்தம்பாளையம், கோல்டன் நகர், ராதாநகர், குமார் நகர், வலையங்காடு பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மருந்துக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
2 மருந்துக்கடைகள் மூடல்
போதை மாத்திரைகள், மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், இளைஞர்கள் அவ்வாறு வந்து மாத்திரைகள் கேட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினார்கள். மருந்துக்கடைகளின் அனுமதியையும் சரிபார்த்தனர்.
இந்த ஆய்வின்போது கொங்கு மெயின் ரோடு ஓம் சக்தி கோவில் வீதியிலும், ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியிலும் 2 மருந்துக்கடைகளில் ஆய்வு செய்தபோது, அந்த மருந்துக்கடைக்கு அனுமதி பெற்ற உரிமையாளர் வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளார். அந்த நபர் அவர் பெயரில் அனுமதி பெறாமல் மருந்துக்கடையை நடத்தியது தெரிய வந்தது. உடனடியாக 2 மருந்துக்கடைகளையும் அதிகாரிகள் பூட்டினார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
கடும் எச்சரிக்கை
ஆய்வு குறித்து போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் கூறும்போது, 'கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை பெருமளவு தடுக்கப்பட்டதால் போதைக்கு அடிமையானவர்கள், சமீபகாலமாக போதை மாத்திரைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் மருந்துகளை சிலர் வாங்கி அதை போதை ஏற்றிக்கொள்ளும் வகையில் பயன்படுத்துகிறார்கள். போதைக்காக குறிப்பிட்ட சில மாத்திரைகளை பொடியாக்கி தண்ணீரில் கலந்து ஊசி மூலமாக உடலில் ஏற்றிக்கொள்கிறார்கள். இதுபோன்ற மருந்து, மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. ஆனால் சில கடைகளில் விற்பனை நடப்பதாக தெரிகிறது.
மேலும் சில மருந்துக்கடைக்காரர்கள், மருந்துக்கடைகளில் நேரடியாக விற்பனை செய்ய முடியாத மாத்திரைகளை ஆன்லைன் மூலமாக வாங்கி அதை முறைகேடாக விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. நேற்று நடந்த ஆய்வில் போதை மருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படவில்லை. இருப்பினும் மருந்துக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். போதை மருந்துகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளோம்' என்றார்.