காரை ஏற்றிக்கொன்ற மருத்துவ மாணவர் கைது
வேதாரண்யம் அருகே கடற்கரையில் பெண் காயங்களுடன் பிணமாக கிடந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது. தகாத உறவை வெளியில் சொல்வதாக மிரட்டியதால் ஆத்திரம் அடைந்த மருத்துவ மாணவர், அந்த பெண்ணை காரை ஏற்றி கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கடற்கரையில் காயங்களுடன் பிணமாக கிடந்த பெண் வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது. தகாத உறவை வெளியில் சொல்வதாக மிரட்டியதால் ஆத்திரம் அடைந்த மருத்துவ மாணவர், அந்த பெண்ைண காரை ஏற்றி கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டில் வேலை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(வயது 50). இவருடைய மனைவி துர்காதேவி(42). இவர்களுக்கு தினேஷ்(20) என்ற மகன் உள்ளார். இவர், நாகையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த சுந்தரமூர்த்தி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்து விவசாயம் பார்த்து வருகிறார்.
'திடீர்' மாயம்
கடந்த 18-ந் தேதி இரவு 8 மணி அளவில் துர்காதேவி மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடன் தொகை செலுத்தி விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
வெளியில் சென்றவர் வீட்டுக்கு திரும்பி வராமல் 'திடீர்' என்று மாயமானதால் பதற்றம் அடைந்த கணவர் சுந்தரமூர்த்தியும், மகன் தினேசும் பல்வேறு இடங்களில் துர்காதேவியை தேடிப்பார்த்தனர். எங்குதேடியும் அவரை காணவில்லை.
கடற்கரையில் பிணம்
இந்த நிலையில் மறுநாள் காலை வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கடற்கரையில் உடலில் படுகாயங்களுடன் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக வாட்ஸ்-அப்பில் தகவல்கள் பரவின.
இதைப்பார்த்த சுந்தரமூர்த்தி அவரது மகன் மற்றும் உறவினர்கள் கடற்கரைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பிணமாக கிடந்தது துர்காதேவி என்பது தெரிய வந்தது.
உடலில் பலத்த காயங்கள்
துர்காதேவியின் உடலில் தலை, கை, கால் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. துர்காதேவி அணிந்திருந்த சங்கிலி, தோடு உள்பட 10 பவுன் நகைகள், செல்போன், வெள்ளிக்கொலுசு ஆகியவையும் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் சுந்தரமூர்த்தி புகார் செய்தார். அதில் வேதாரண்யம் கடற்கரையில் காயங்களுடன் இறந்து கிடப்பது தனது மனைவி துர்காதேவி என்று தெரிவித்தார்.
இதனையடுத்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் போலீசாருடன் புஷ்பவனம் கடற்கரைக்கு சென்று துர்காதேவியின் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
நாகையில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். நாகையில் இருந்து மோப்ப நாய் 'துலிப்' சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடமான புஷ்பவனம், செம்போடை, தேத்தாக்குடி தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
கடத்தி கொலையா?
தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள இடத்திற்கு சென்று பணம் கட்டி விட்டு வருவதாக கூறிச்சென்ற துர்காதேவி, புஷ்பவனம் கடற்கரையில் இறந்து கிடந்தது எப்படி?.
அவரை யாரேனும் கடத்திச்சென்று கற்பழித்துக்கொன்று கடற்கரையில் உடலை வீசி விட்டு சென்றனரா? அல்லது வேறு எங்கேனும் வைத்து அவரை கொன்று கடற்கரையில் வீசி விட்டு சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
செல்போன் 'சுவிட்ச் ஆப்'
துர்காதேவியின் வீடு உள்ள தேத்தாகுடி தெற்கிற்கும், அவரது உடல் கிடந்த புஷ்பவனம் கடற்கரைக்கும் சுமார் 10 கி.மீ. தூரம் இருந்து உள்ளது. மேலும் துர்காதேவி சம்பவத்தன்று வீட்டில் இருந்த கிளம்பிய ஒரு மணி நேரம் மட்டுமே அவரது செல்போன் வேலை செய்துள்ளது என்பதும் அதன் பின்னர் அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' என்று வந்துள்ளதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்த வழக்கில் தீவிர புலனாய்வு செய்து இதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தனிப்படை ஒன்றை அமைத்தார். இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காரை ஏற்றி கொலை
போலீசாரின் தீவிர விசாரணையில் துர்காதேவி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக புஷ்பவனத்ைத அடுத்த அழகு கவுண்டர் காட்டை சேர்ந்த சுந்தரவடிவேலு என்பவரின் மகனும், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மயக்கவியல் படிப்பு படித்து வரும் மாணவருமான அருண்(20) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் துர்காதேவியை காைர ஏற்றி கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
தகாத உறவு
கொலை செய்யப்பட்ட துர்காதேவிக்கும், கைதான மருத்துவக்கல்லூரி மாணவர் அருணுக்கும் இடையே தகாத உறவு இருந்து உள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து உள்ளனர்.
சம்பவத்தன்றும் இருவரும் புஷ்பவனம் கடற்கரையில் உல்லாசமாக இருந்து உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே பண விசயம் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
கைது
அப்போது பணம் கொடுக்காவிட்டால் தங்களுக்கு இடையே உள்ள தகாத உறவை வெளியில் சொல்லி விடுவேன் என்று துர்காதேவி அருணிடம் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அருண், மூன்று முறை துர்காதேவியின் மீது காரை ஏற்றி கொலை செய்து உள்ளார். இதனையடுத்து அருணை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.