நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு இயற்கை நல பெட்டகம்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு இயற்கை நல பெட்டகம் வழங்கப்பட்டது.
மோகனூர்:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் 19 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை மருத்துவ விழிப்புணர்வு மற்றும் இயற்கை நல பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முருகன் தலைமை தாங்கினார். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவின் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளான உபவாச சிகிச்சை, யோகா சிகிச்சை, உணவு சிகிச்சை, மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, மசாஜ் மற்றும் நறுமண சிகிச்சை, காந்த சிகிச்சை, நிற சிகிச்சை, இயன்முறை சிகிச்சை மற்றும் இயற்கை மூலிகை சிகிச்சை பற்றி பேசினார்.
தொடர்ந்து 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு கருவேப்பிலை பொடி, நெல்லிக்காய் பொடி, முருங்கை இலை பொடி மற்றும் தேன் அடங்கிய தமிழக அரசின் இயற்கை நல பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுஜாதா, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முதலாமாண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வெஸ்லி மற்றும் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.