மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தில் முதற்கட்டமாக 4 தூண்கள் நிறுவப்பட்டது - ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க தீவிரம்-தக்கார் கருமுத்து கண்ணன் தகவல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தில் முதற்கட்டமாக 4 தூண்கள் நிறுவப்பட்டது. ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க தீவிரம் காட்டி வருவதாக தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தில் முதற்கட்டமாக 4 தூண்கள் நிறுவப்பட்டது. ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க தீவிரம் காட்டி வருவதாக தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்தார்.
வீரவசந்தராயர் மண்டபம்
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி இரவு நடந்த தீ விபத்தில் கோவிலில் கிழக்கு வாசல் ராஜகோபுரம் வழியாக சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் எரிந்து சேதமாகின. அன்றைய தினத்தில் இருந்து கிழக்கு ராஜகோபுரம் மூடப்பட்டு பக்தர்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. விபத்து நடந்த பகுதியை பழமை மாறாமல் ஆகம விதிப்படி புனரமைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகமும், அரசும் முடிவு செய்தது.
அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாலக்கோடு அருகே உள்ள பட்டினம் மலை அடிவாரத்தில் உள்ள கற்களை புனரமைப்பு பணிக்கு பயன்படுத்த அரசு முடிவு செய்தது. அங்கு கற்கள் வெட்டி எடுக்க ரூ.6.40 கோடி, மண்டப வடிவமைப்புக்கு ரூ.11.70 கோடி நிதி அரசு ஒதுக்கீடு செய்தது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வளையங்குளத்தில் உள்ள கூடல்செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டது. அந்த கற்களை தூண்களாக செதுக்கும் பணி திருப்பூர் ஸ்பதி வேல்முருகன் என்பவருக்கு அரசு வழங்கியது.
சிறப்பு பூஜை
வீரவசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கடந்த ஜூன் மாதம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல முறை மதுரை வந்து கற்கள் செதுக்கும் பணியை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் தூண்கள் செதுக்கும் பகுதியான வளையங்குளத்தில் உள்ள கூடல்செங்குளம் பண்ணையில் சுமார் 17½ அடி நீளமுள்ள 4 தூண்கள், 4 போதியல்கள் (பீம்), 5 உத்திரம், 32 பாவு கற்கள், சிம்ம பீடம் ஆகியவை அழகிய வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. அதனை மீனாட்சி அம்மன் கோவிலில் நிறுவுவதற்கான விழா நேற்று காலை நடந்தது.
அதையொட்டி ஆயிரங்கால் மண்டபத்தை ஒட்டியுள்ள வீரவசந்தராயர் மண்டபம் வடக்கு பகுதியில் புதிய தூண்களை நிறுவுவதற்கான சிறப்பு பூஜைகள் பட்டர் செந்தில், ஹலாஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் கலெக்டர் அனிஸ்சேகர், கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மேயர் இந்திராணி, கோவில் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஓராண்டிற்குள் நிறுவப்படும்
பின்னர் தக்கார் கருமுத்து கண்ணன் கூறும்போது, வீரவசந்தராயர் மண்டபத்தில் முதற்கட்டமாக 4 கல்தூண்கள் நிறுவப்பட்டுள்ளது. கற்கள் விரைவில் எடுத்து வரப்பட்டு ஓராண்டிற்குள் மண்டபத்தில் தூண்கள் அனைத்தையும் நிறுவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றார்.
ஸ்தபதி வேல்முருகன் கூறும்போது, மொத்தம் மண்டபத்திற்கு 60 தூண்கள் தேவைப்படும் பட்சத்தில் சித்ராகல் தூண்கள் 4 தற்போது நிறுவப்பட்டுள்ளது. இந்த மண்டபத்திற்கு 6 வகையான தூண்கள் தேவைப்படுகிறது. தற்போது இருக்கிற கற்களை கொண்டு 2 தூண்களை வடிவமைத்து வருகிறோம். கற்களை வெட்டி வேகமாக கொண்டு வருவதன் மூலம் பணிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னர் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.