லட்ச தீபத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோவில் - விளக்கொளியில் காட்சி தந்த சுந்தரேசுவரர்
லட்சதீபம் ஏற்றப்பட்டதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விளக்கொளியில் ஜொலித்தது. சுவாமி-அம்மன் காட்சி தந்தனர்.
லட்சதீபம் ஏற்றப்பட்டதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விளக்கொளியில் ஜொலித்தது. சுவாமி-அம்மன் காட்சி தந்தனர்.
கார்த்திகை திருவிழா
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் சித்திரை, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, மாசி திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ந் தேதி வரை நடக்கிறது.
விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலையில் ஆடி வீதிகளில் வலம் வந்து காட்சி அளித்து வருகின்றனர்.
லட்ச தீபம்
கார்த்திகை தீப தினமான நேற்று மாலை கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதி, மண்டபங்கள் தீப விளக்கு ஔியில் பிரகாசித்தன. கோவில் பணியாளர்கள், பக்த சபையினர் உள்பட ஏராளமானோர் பங்கேற்று கோவில் முழுவதும் அகல்விளக்குகளை ஏற்றினர். இதனால் கோவில் வளாகம் கண்கொள்ளா காட்சியாக மாறி இருந்தது. இரவு 7 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் தீபஒளியில் பக்தர்களுக்கு காட்சி தந்து, கோவிலில் இருந்து புறப்பட்டனர். அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடியில் எழுந்தருளினர்.
சொக்கப்பனை ஏற்றப்பட்டது
அப்போது அங்கு சொக்கப்பனை ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.