மதுரையில் கொட்டும் மழையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் வீதி உலா


மதுரையில் கொட்டும் மழையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்

மதுரை


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை, இரவு என இருவேளையும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். விழாவில் 2-வது நாளான நேற்று மீனாட்சி அம்மன் அன்னவாகனத்திலும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் பூதவாகனத்திலும் எழுந்தருளினார்கள். பின்னர் கோவிலில் இருந்து சுவாமி இரவு 7.40 மணிக்கு மேல் வீதி உலாவிற்கு புறப்பட்டது. கீழமாசி வீதி, தெற்குமாசி வீதிகளை தாண்டி மேலமாசிவீதிக்கு சுவாமி வரும் போது திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. உடனே பட்டர்கள் சுவாமியை மழையில் நனைந்து விடாமல் இருக்க வேமாக கொண்டு சென்றனர். ஆனாலும் காற்று பலமாக வீசியதால் மேலமாசி வீதியில் மீனாட்சி அம்மன் வரும் போது சுவாமிக்கு வைக்கப்பட்டிருந்த குடை சரிந்து விழுந்தது. பின்னர் அதனை பட்டர்கள் பிடித்து சரி செய்து சுவாமியை அங்கிருந்து கொண்டுசென்றனர். தொடர்ந்து மழை பெய்ததால் நேதாஜி ரோடு முருகன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமியை நிறுத்தி வைத்தனர். பின்னர் மழை நின்ற பிறகு சுவாமியை மேற்கொண்டு வடக்கு, கீழ மாசி வீதிகளில் கொண்டு செல்லாமல் மேல கோபுரம் வழியாக கோவிலுக்குள் பாதுகாப்பாக கொண்டு சென்றனர். கொட்டும் மழையில் சுவாமி வீதி உலா வருவதை கண்ட பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story