அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியாததால் மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை
அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியாததால் மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்று தி.மு.க. மண்டல தலைவர்கள் குற்றம்சாட்டி பேசினர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியாததால் மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்று தி.மு.க. மண்டல தலைவர்கள் குற்றம்சாட்டி பேசினர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எம்.எல்.ஏ. பேச்சு
மதுரை மாநகராட்சி சாதாரண கூட்டம், அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. மேயர் இந்திராணி தலைமை தாங்கினார். கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியவுடன் மேயர், எம்.எல்.ஏ.வை வரவேற்று அவரை பேசுமாறு அழைத்தார்.
அதனைத்தொடர்ந்து பூமிநாதன் பேசும் போது, கடந்த ஓராண்டாக மக்கள் பணி செய்து வருகிறேன். எங்கள் பகுதி முழுவதும் குடிநீரில் சாக்கடை கலந்து வருவது, தெருவில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவது தான் மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த பிரச்சினையை தீர்க்கவே பெரும்பாடு பட வேண்டி உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போது தான் நாம் மக்களின் அடுத்த தேவைகள் அறிந்து செயல்பட முடியும் என்றார். அதன்பின், மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பேசினர்.
சேதம் அடைந்த சாலைகள்
வாசுகி (மண்டலம் தலைவர்-1) : தெரு விளக்கு எரியாமல் இருப்பது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. பாதாள சாக்கடை பணிகள் எங்கள் பகுதியில் நடக்கிறது. இந்த பணியால் சேதம் அடைந்த சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளது. ஒரு இடத்தில் பணியை முடித்து வேறு இடத்தில் தொடங்க வேண்டும். ஆனால் எந்த திட்டமிடுதலும் இல்லாமல் அனைத்து சாலைகளையும் தோண்டி போடுகின்றனர். பணியும் மந்த நிலையில் நடக்கிறது. மழை காலம் தொடங்க உள்ள இந்த சூழ்நிலையில் சாலைகள் சேதம் அடைந்து இருந்தால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த பணியினை தினமும் கண்காணிப்பு செய்து விரைவாக செய்து முடிக்க வேண்டும்.
கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்: பாதாள சாக்கடை பணிகளை தினமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதம் அடைந்த சாலைகளை விரைவில் சீரமைப்போம்.
பேரிடர் குழு
சரவண புவனேசுவரி (மண்டல தலைவர்-2) : மண்டல அளவில் இதுவரை 3 கூட்டங்கள் நடத்தி, தீர்மானங்களை அனுப்பி வைத்தோம். ஆனால் இதுவரை எந்த பணியும் நடைபெற வில்லை. இதனால் மண்டல கூட்டங்கள் நடத்துவது பயன் அற்றதாக உள்ளது. ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பாதாள சாக்கடை மூடியை கூட எங்களால் மாற்ற முடியவில்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் நிதி இல்லை என்று காரணம் கூறுவது, ஏற்புடையது அல்ல. எந்த கவுன்சிலர்களுக்கும், அலுவலகம் இன்னும் ஒதுக்கீடு செய்ய வில்லை. கவுன்சிலர்கள் எங்கு உட்கார்ந்து பணி செய்வார்கள்.
முகேஷ் சர்மா (மண்டல தலைவர்-4) : எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. ஒவ்வொரு கழிவு நீரேற்று நிலையத்திலும் 2 மோட்டார்கள் வைத்து இருக்க வேண்டும். ஒன்று பழுதானால், மற்றொன்றை பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது ஒரு மோட்டார் பழுதானால் அதனை சரி செய்வது பொருத்துவதற்கு காலதாமதம் ஆகிறது. இதனால் சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கள் பகுதியில் உள்ள சாலைகள், மிகவும் சேதம் அடைந்து உள்ளது. மழை காலத்தில் நீர் வந்து தேங்கினால் எங்கள் பகுதி மக்களை மீட்க பேரிடர் குழு தான் வர வேண்டும்.
அ.தி.மு.க. வெளிநடப்பு
ரவிச்சந்திரன் (93-வது வார்டு) : வடமாநிலத்தில் இருந்து வந்திருந்தாலும் மாநகராட்சி கமிஷனர் தமிழ் நன்றாக பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர் காலையில் 6 மணிக்கே ஆய்வு பணியினை தொடங்கி விடுகிறார். அவரது நற்பணியால் தான் எங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். தெரு விளக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
மேயர் இந்திராணி: தெரு விளக்கு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு மாநகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தி.மு.க. மண்டல தலைவர்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று நிதி பிரச்சினையை காரணம் கூறி அத்தியாவசிய மக்கள் பணிகளை தள்ளி போட முடியாது. அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க முடியாததால் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை என்று ஒருமித்த குரலில் எழுந்து பேசினர். அதே போல் கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வரி உயர்வு தொடர்பான தீர்மானத்தை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.