கொப்பரை கொள்முதல் விலையை கிலோ ரூ.140 ஆக நிர்ணயிக்க வேண்டும்
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை கிலோ ரூ.140 -ஆக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து உடுமலையில் நடந்த தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க முதல் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை கிலோ ரூ.140 -ஆக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து உடுமலையில் நடந்த தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க முதல் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்னை விவசாயிகள் சங்க மாநில மாநாடு
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க முதல் மாநில மாநாடு உடுமலை அனுஷம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சங்க மாநில துணை அமைப்பாளர் எம்.முத்துராமு தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.பரமசிவம் முன்னிலை வகித்தார். வரவேற்பு குழு செயலாளர் ஆர்.பாலதண்டபாணி வரவேற்று பேசினார். மாநாட்டை விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தொடங்கி வைத்து பேசினார். மாநில அமைப்பாளர் ஏ.விஜயமுருகன் அறிக்கை வாசித்தார். சங்க பொதுச்செயலாளர் பி.சண்முகம் சிறப்புரையாற்றினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார் வாழ்த்தி பேசினார். மாநாட்டில் மாநிலக்குழு மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். டி.அருண்பிரகாஷ் நன்றி கூறினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
கிலோவுக்கு ரூ.140 வழங்க வேண்டும்
கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை 50 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதிகபட்சமாக உரித்த தேங்காய் ஒன்று ரூ.25 வரை விற்பனையாகி வந்தது.
அது தற்போது ரூ.12-க்கு வந்துவிட்டது. தென்னையில் இருந்து கிடைக்கும் தேங்காய் 2உரிமட்டை, தேங்காய் சிரட்டை உட்பட்ட பொருட்களும், விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புக்குள்ளாகினர்.
எனவே மத்திய அரசு அளித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலையான கிலோ ரூ.105.90 என்பது போதுமான விலையல்ல. அந்த விலைக்கே தமிழகத்திலும் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கொப்பரை கொள்முதலை துரிதப்படுத்த, நிபந்தனைகளை தளர்த்தி அனைத்து விவசாயிகளிடமும் கொப்பரையை கொள்முதல் செய்ய வேண்டும்.
தேங்காய் கொப்பரை கொள்முதல் விலையை கிலோ ரூ.140-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மாநில அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
சோப்பு தயாரிக்க
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, தேங்காய் எண்ணையை அரசே கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகள் மூலம் வினியோகம் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணைக்கு விதித்துள்ள ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்து, தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். சோப்பு தயாரிப்பாளர்கள் தேங்காய் எண்ணையை பயன்படுத்தி சோப்பு தயாரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் உரித்த தேங்காய்களை கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்யவேண்டும். தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகத்தை கோவைக்கு மாற்றவேண்டும். உடுமலையை அடுத்து திருமூர்த்திநகரில் உள்ள தென்னை வளர்ச்சி வாரிய ஆராய்ச்சி நிலையத்தில் தமிழக தென்னை விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.