தார்சாலை அமைக்கும் பணி
திருப்பூர் 2-வது மண்டல பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்த இடங்களில் தார்சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று மாநகராட்சி உதவி ஆணையாளர் கண்ணன் தகவலாக தெரிவித்துள்ளார்.
திருப்பூர் 2-வது மண்டல பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்த இடங்களில் தார்சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று மாநகராட்சி உதவி ஆணையாளர் கண்ணன் தகவலாக தெரிவித்துள்ளார்.
மண்டல கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலகூட்டம் போயம்பாளையம் நஞ்சப்பாநகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல கூட்டத்திற்கு கோவிந்தராஜ் தலைமை தாங்கினார் கூட்டத்திற்கு மண்டல உதவி ஆணையாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசிய விபரம் பின்வருமாறு:-
16-வது வார்டு கவுன்சிலர் தமிழ்செல்வி கனகராஜ் (அ.தி.மு.க.) - வ.உ.சி.நகர் 2-வது வீதியில் சாக்கடை கால்வாய் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கியும் இதுவரை அங்கு கால்வாய் அமைக்கப்படவில்லை. அனைத்து பகுதிகளிலும் உடனடியாக சாலை பணிகள் தொடங்க வேண்டும். தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால் குப்பைகள் தேங்கி உள்ளன.
20-வது வார்டு கவுன்சிலர் குமார் (ம.தி.மு.க.):- 10 இடங்களில் சாலை பணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். பணிகள் தொடங்க தாமதம் ஏற்படும் பட்சத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் பேட்ஜ் பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேட்டுப்பாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையம் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதால், அதை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் அமைக்க வேண்டும்.
சாலை அமைக்கும் பணி
7-வது வார்டு கவிதா விஜயகுமார் (அ.தி.மு.க.):- போயம்பாளையம் சக்திநகர், குருவாயூரப்பன்நகரில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள தனியார் கிணற்றை உடனடியாக மூட வேண்டும். 4-வது திட்ட குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்படாத இடங்களில் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
கவுன்சிலர்களின் விவாதத்திற்கு பதில் அளித்து உதவி ஆணையாளர் கண்ணன் பேசியதாவது, 2-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 4-வது குடிநீர் திட்ட பணிகள் 20 சதவீதம் மட்டுமே நிறைவடையாமல் உள்ளது. மண்டலத்தில் 139 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த பணிகள் நிறைவடைந்த இடங்களில் முழுமையாக தார்சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.