நாமக்கல் மாவட்டத்தில் 150 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மைகுழு மறுகட்டமைப்பு கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 150 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாமக்கல்:
ஆலோசனை கூட்டம்
அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு விட்டன.
இந்தநிலையில் நேற்று 150 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பள்ளி மேலாண்மை குழுவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பெரியண்ணன் தலைமை தாங்கினார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் நகராட்சி கவுன்சிலர்கள் கமலா தர்மலிங்கம், கிருஷ்ண லட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நகரவை பள்ளி
இதேபோல் நாமக்கல் நகரவை கோட்டை உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை மரகதம் தலைமையில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் டி.டி.சரவணன், கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் ரவி, பொருளாளர் ராஜன், பள்ளி உதவி தலைமை ஆசிரியை ரைசா பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவினர் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இதேபோல் நாமக்கல் வடக்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் நேற்று பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.