சிங்கம்புணரி ஒன்றிய குழு கூட்டம்
சிங்கம்புணரியில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஒன்றிய குழு கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஒன்றிய குழு கூட்டம்
சிங்கம்புணரியில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜூ, கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 26 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டது.
கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் உதயசூரியன் பேசுகையில், கடந்த மாதம் முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட சமத்துவபுரத்தில் பயனாளிகள் தேர்வு குறித்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த தகவலும் இல்லை. வசதி படைத்தவர்களுக்கு அதிகாரிகள் வீடுகளை வழங்கி உள்ளார்கள். தகுதி படைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இதுபோன்று நடைபெறாமல் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
வீடு வழங்கப்படவில்லை
மேலும் துறை சார்ந்த அதிகாரிகள் குறிப்பாக வேளாண்துறை, மின்சார துறை, சுகாதார துறை போன்ற அதிகாரிகள் ஒன்றிய குழு கூட்டத்திற்கு முறையாக வருவதில்லை. இதனால் எங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகளை அவர்களிடம் தெரிவிக்க முடியவில்லை. வருங்காலங்களில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து கவுன்சிலர் கலைச்செல்வி அன்பு செழியன் பேசுகையில், எனது வார்டில் கதவு இல்லாத மழையின் போது ஒழுகும் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வசிக்கும் குடும்பத்தினர் சமத்துவபுர வீட்டிற்கு விண்ணப்பித்து, அதிகாரிகள் ஆய்வு செய்தும் வீடு வழங்கப்படவில்லை.
தெரியப்படுத்த வேண்டும்
மேலும் துறை சார்ந்த அதிகாரிகள் உறுப்பினர்களுக்கு எந்த வித தகவலும் தெரிவிப்பதில்லை. இனிவரும் காலங்களில் ஊராட்சி ஒன்றியங்களில் நடக்கின்ற துறை சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளும் எங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு துணைத் தலைவர் சரண்யா ஸ்டாலின், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி அன்புச்செழியன், ரம்யா செல்வகுமார், உமா சோனமுத்து, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரிய கருப்பிமுத்தன், இளங்குமார், சசிகுமார் மற்றும் கணக்கர் அய்யனார், அலுவலக பணியாளர்கள், உறுப்பினர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.