திறந்த வாகனம், ஒலிபெருக்கி, பிளக்ஸ் போர்டுகளுக்கு தடை


திறந்த வாகனம், ஒலிபெருக்கி, பிளக்ஸ் போர்டுகளுக்கு தடை
x

பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி திறந்த வாகனத்தில் வர, ஒலிபெருக்கி பயன்படுத்த, பிளக்ஸ் போர்டுகளுக்கு தடை விதித்து கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி திறந்த வாகனத்தில் வர, ஒலிபெருக்கி பயன்படுத்த, பிளக்ஸ் போர்டுகளுக்கு தடை விதித்து கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் அனைத்துதுறை அலுவலர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படும். வாடகை வாகனங்கள் மற்றும் திறந்த வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கன், டிராக்டர், டாடா ஏஸ், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. சொந்த வாகனங்களில் வருபவர்கள் வாகன எண், வாகன பதிவு சான்று, ஓட்டுனர் உரிமம், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை 8-ந்தேதிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் அளித்து வாகன அனுமதி சீட்டு பெறவேண்டும்.

இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. பிற மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வரும் நபர்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற்று வர வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும். வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது. ஆயுதங்கள் எடுத்து செல்லக் கூடாது. வெடி வெடிக்க கூடாது. வாகனத்தில் ஒலி பெருக்கி பொருத்தக்கூடாது. சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.

கூடுதல் பஸ்கள்

பரமக்குடி நகருக்குள் சந்தைப்பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது. கூடுதல் பஸ்கள் 11-ந்தேதி மட்டும் இயக்கப்படும். அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் வரும்பொழுது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். மேலும் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த மாதம் 8-ந்தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்.​

நடைபயணம்

பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நடைபயணமாக செல்லலாம். ஜோதி, முளைப்பாரி மற்றும் பால்குடம் நினைவிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிற்குள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும். அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், சாதி தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. நினைவிடத்தில் தேவேந்திர பண்பாட்டு கழகம் சார்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒரு ஒலிபெருக்கி மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படும். நினைவிடத்திற்குள் தலைவர்கள் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி இல்லை. பரமக்குடி நினைவிடத்தில் 11-ந்தேதி மாலை 4 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசின் விதிமுறைகளை ஏற்று பொதுமக்கள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துமாறு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கேட்டுக்கொண்டார்.


Next Story