தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காவிட்டால் கலெக்டரிடம் பணி விலகல் கடிதம் அளிக்கப்படும்; சங்க கூட்டத்தில் தீர்மானம்
தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காவிட்டால் கலெக்டரிடம் பணி விலகல் கடிதம் அளிக்கப்படும்; சங்க கூட்டத்தில் தீர்மானம்
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி.வை சேர்ந்த சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர் ஆகிய ஒன்றிய தூய்மை பணியாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சங்க நிர்வாகிகள் கே.சக்திவேல், மோகன், அருள்சாமி, ராமசாமி, எஸ்.சி.நடராஜ், எம்.சுரேந்தர், வேலுச்சாமி, மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வேலை உறுதித் திட்டத்திலிருந்து எங்களை விடுவித்து மாதம் ரூ.2 ஆயிரத்து 600 வழங்கப்பட்டது. ஏற்கனவே பெற்ற கூலியை விட குறைவான கூலி வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் தயங்காமல் பணியாற்றிய எங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கிடைக்கும் கூலியை கொண்டு வாழ்க்கையை நடத்த முடியவில்லை. எனவே ஊரக உள்ளாட்சி துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களான எங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்.
மேலும் ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை அரசு கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வரும் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் நாளிலிருந்து முடியும் வரை சத்தியமங்கலத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். கோரிக்கைகள் ஏற்கப்படாத பட்சத்தில் மாவட்ட கலெக்டரிடம் அனைத்து தொழிலாளர்களும் பணி விலகல் கடிதம் கொடுப்போம் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.