கிருஷ்ணகிரியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்-கலெக்டர் தலைமையில் நடந்தது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது.
மக்களிடையே விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். முதன்மை குற்றவியல் நடுவர் ராஜசிம்மவர்மன், குற்றவியல் நீதிமன்ற நடுவர் கார்த்திக் ஆசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக கிராம சபை கூட்டங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டத்தில் 3 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு
கொரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்த 15 குழந்தைகள் அரசின் கண்காணிப்பில் பாதுகாவலர் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். அதேபோல், பள்ளி இடைநின்ற 3 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகளின் குடும்ப பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, தொடர்ந்து கல்வி கற்க உதவும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான 9 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இல்லங்கள் மற்றும விடுதிகளை முறையாக ஆய்வு செய்ய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.5¾ லட்சம்
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை 22 பெண் குழந்தைகள் மற்றும் 14 ஆண் குழந்தைகள் என மொத்தம் 36 குழந்தைகளுக்கு ரூ.5 லட்சத்து 76 ஆயிரம் நிதி அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி, இளஞ்சிறார் நீதி குழும உறுப்பினர் வின்சென்ட் சுந்தர்ராஜ், குழந்தைகள் நல குழும உறுப்பினர்கள் அமுதா, காயத்ரி, நன்னடத்தை அலுவலர் மகேந்திரன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏசுபாதம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவன பிரதிநிதிகள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.