ஓசூர் மாநகராட்சி கூட்டம்: அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநகராட்சி கூட்டம்
ஓசூர் மாநகராட்சி கூட்டம் நேற்று கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் திடீரென எழுந்து நின்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக அடுக்கடுகான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அவர்கள், வார்டு பகுதிகளில் திட்டப்பணிகள் முறையாக நிறைவேற்றப்படுவதில்லை. திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தங்கள் முறையாக நடத்தப்படுவதில்லை. மேலும் இதுகுறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்களான தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிப்பதில்லை என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிநடப்பு
இதனிடையே அ.தி.மு.க. கவுன்சிலர்கள், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எஸ்.நாராயணன், மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் கூட்டத்ததை புறக்கணித்து, அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்ட 254 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.