இதய அறுவை சிகிச்சைக்கான தொகையை ஓய்வூதியர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும்-சங்க கூட்டத்தில் தீர்மானம்
தர்மபுரி:
தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சதாசிவம் வரவேற்றார். நிர்வாகிகள் கந்தசாமி, மணி, ஜெயபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஓய்வூதியர்களுக்கு 1.7.2022 முதல் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள 4 சதவீத டி.ஏ.வை வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2022-க்கான அடையாள அட்டையை உடனே வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது ஏற்படும் செலவின தொகையை அரசு முழுமையாக ஏற்று திரும்ப வழங்க வேண்டும். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஓய்வூதியர்களுக்கு அரசாணைப்படி ஒரு கண்ணுக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். இதேபோல் இதய அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளுக்கு செலவிடப்படும் மொத்த தொகையையும் முழுமையாக வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.