மொரப்பூரில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி ஆலோசனை கூட்டம்-மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் பங்கேற்பு
மொரப்பூர்:
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இளைஞரணி மற்றும் மாணவரணி ஆலோசனை கூட்டம் மொரப்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திரமோகன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர்கள் வக்கீல் மணி, கிருஷ்ணகுமார், ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொரப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் வரவேற்றார். இதில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், இந்தி திணிப்பு மற்றும் நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தர்மபுரியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி, மாணவரணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன், சென்னகிருஷ்ணன், மனோகரன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் முருகன், பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, கவுதமன், பார்த்திபன், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடாசலபதி, பன்னிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் வெற்றிசெல்வன் துரை, கொன்றம்பட்டி சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மொரப்பூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் லோகேஷ் நன்றி கூறினார்.