காரைக்குடி நகர்மன்ற கூட்டம்
காரைக்குடி நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி நகர்மன்ற கூட்டம் தலைவர் முத்துத்துரை தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் லெட்சுமணன், என்ஜினீயர் கோவிந்தராஜன் மற்றும் அதிகாரிகள், உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- உறுப்பினர் மைக்கேல்:- வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கொடுக்கும்போது அப்பகுதியின் மன்ற உறுப்பினர்களையும் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். கண்ணன்:- ஐந்து விலக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் குப்பைக்கிடங்காக மாறி நகரின் அழகை கெடுப்பதோடு சுகாதார கேட்டினையும் விளைவிக்கிறது.
தலைவர்:-. ஐந்து விலக்கு அருகே சுகாதார கேடு ஏற்படுத்துபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பசும்பொன் மனோகரன்:- சுகாதார ஆய்வாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகளை முடுக்கிவிட்டு மேற்பார்வையிடவேண்டும். ரெத்தினம்:- எனது பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் கால்வாய்களை தூர்வார வேண்டும். குணசேகரன்:- தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடங்களில் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் பெற்று நகராட்சி வரி விதிப்பு செய்ய வேண்டும். இதன் மூலம் நகராட்சிக்கு வருமானம் உயரும்.
தலைவர்:- உறுப்பினர்களின் கோரிக்கைகள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. மேலும், அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தேசிய விருது பெற்றதற்கு நகர்மன்றத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.