சாலை பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேலுமலை பகுதியில் விபத்தினை தடுக்கும் பொருட்டு சிவப்பு ஒளிரும் விளக்குகள், உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்கப்படும். மேலும் வாகனங்கள் மெதுவாக செல்ல ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யப்படும். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
விபத்துகளை தடுக்க...
மேலும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வாகனங்கள் அபாயகரமாக பிரதான சாலையை கடப்பதால் விபத்துகளை தடுக்கும் பொருட்டு தடுப்பு சுவரிலுள்ள இடைவெளியை முழுவதுமாக அடைக்க வேண்டும். மேம்பாலம் அருகே பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் எதிர் திசையில் செல்லுவதால் அங்கு ஒரு போக்குவரத்து காவலர் மற்றும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும். மேலும், விதிகளை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது..
கே.ஆர்.பி. அணை சந்திப்பு சாலை அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்கும் வகையில் வாகனங்களை முற்றிலும் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். சென்னை தேசிய நெடுஞ்சாலை குப்பம் பிரிவு சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வெள்ளை ஒளிரும் பட்டைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
விபத்தில்லாத மாவட்டம்
நகரின் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரதான சாலை சந்திப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, சாலை போக்குவரத்தை கண்காணிப்பது. விதி மீறல்கள் இல்லாமல் சிறு சிறு விபத்துகளை தவிர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, சாலை விதிகளை கடைபிடித்து, உயிரிழப்புகளை தவிர்த்து, உயிர்களை பாதுகாத்து, விபத்தில்லா கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.