கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி செலுத்த வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை விரைவாக அளிக்க வேண்டும். மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர் காப்பீடு
நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒகேனக்கல் காவிரி உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். பயிர் காப்பீடு திட்டங்களில் சேரும் விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்படும்போது நியாயமான இழப்பீடு கிடைப்பதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்
இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.
உற்பத்தி பெருக்கம்
கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் வகையில் நடப்பு ஆண்டில் 752 டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர்கள் விஸ்வநாதன், ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ராமதாஸ், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சண்முகசுந்தரம், வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை துணை இயக்குனர் கணேசன், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசேகரன் உள்பட அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.