333 ஊராட்சிகளில்கிராம சபை கூட்டம்-நாளை மறுநாள் நடக்கிறது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிராம சபை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) உள்ளாட்சி தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கிராம சபை கூட்டத்தில், உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என அறிவித்த, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.
ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள், மகளிர் குழுக்களை சிறப்பித்தல், அனைத்து கிராமமறுமலர்ச்சி திட்டம்-2 பணிகளின் முன்னேற்ற விவரம், கலைஞர் வீடு திட்ட கணக்கெடுப்பு அறிக்கையினை உறுதி செய்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்படுகிறது.
அலுவலர்கள் நியமனம்
இந்த கூட்டத்தை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில், தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இதனை கண்காணிக்க, மாவட்ட அளவிலான அலுவலர்கள், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.