251 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
உள்ளாட்சி தினத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிடுவம்பட்டி கிராமத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பங்கேற்றார்.
உள்ளாட்சி தினத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிடுவம்பட்டி கிராமத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பங்கேற்றார்.
கிராம சபை கூட்டம்
உள்ளாட்சிகள் தின விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. அந்தந்த ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் இந்த கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். மேலும் பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மனுக்களை வழங்கினர்.
அந்தந்த ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தை கொண்டாடும் வகையில் ஊழியர்கள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் கிராம சபை கூட்டங்களில் நவம்பர் 1-ந் தேதியை உள்ளாட்சிகள் தினமாக அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், கிராம வறுமை குறைப்பு திட்டம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதார திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது.
கலெக்டர் பங்கேற்பு
ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் தொன்னகுட்டஅள்ளி ஊராட்சி சிடுவம்பட்டி கிராமத்தில் நடந்த உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார். அப்போது அவர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அரசியல் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் முறையாக சென்றடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லா தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ரூ.14.88 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் ஏரியூர் ஒன்றியக்குழு தலைவர் பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சுவாமிநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, தாசில்தார் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், மீனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.