ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம்
வணிகர் நல சங்கம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் உள்ள முக்கிய சாலையான திண்டுக்கல்-காரைக்குடி சாலை மற்றும் மேலூர் பெரிய கடை வீதி சாலை ஆகிய சாலைகளில் சமீப காலங்களாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தினத்தந்தியில் செய்தி வெளியானது. இந்நிலையில் தினத்தந்தி செய்தி எதிரொலியாக அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து சிங்கம்புணரி வணிகர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவில் திறந்தவெளி மண்டபத்தில் நடந்தது. தாசில்தார் சாந்தி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, செயல் அலுவலர் ஜான்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகர் சங்க தலைவர் வாசு, துணை தலைவர் சரவணன், பொருளாளர் சிவக்குமார், இணை செயலாளர் திருமாறன் வரவேற்றனர். போக்குவரத்து ஆய்வாளர் மனோகரன், காவல் துணை ஆய்வாளர் குகன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், தொடர் திருட்டை தடுக்க சிங்கம்புணரி முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதில், தொழிலதிபர்கள், வணிகர் சங்க உறுப்பினர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.