பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அட்மா திட்டம் சார்பில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் வெண்ணிலா கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரவி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் நிலவும் பூச்சி, நோய் தாக்குதல், மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புதிய தொழில் நுட்பங்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் மானிய திட்டங்கள் குறித்து வேளாண் அறிவியல் நிலையத்தின் வேளாண் விஞ்ஞானிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண் வணிகத்துறை, பட்டு வளர்ப்புத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களுடன் கலந்துரையாடினர். வேளாண்மை அலுவலர் தேவி பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாட்டினை உதவி வேளாண்மை அலுவலர்கள் முருகேசன், கோகிலா, உதவி தொழில்நுட்ப மேலாளர் அஷ்வினி, கலைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.