விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணிபாஸ்கரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா(சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) தனபாலன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள், மானியம், இலவச வீட்டுமனை வழங்குதல், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வரத்து கால்வாய் சீரமைத்தல், மின் இணைப்பு, தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.35 லட்சத்து 27ஆயிரத்து 744 மதிப்பீட்டில் வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்களின் மானிய தொகைக்கான ஆணைகளையும், மீன்வளத்துறையின் சார்பில் 1 விவசாயிக்கு 2,000 மீன்குஞ்சுகளையும் கலெக்டர் வழங்கினார்.