மானாமதுரை நகராட்சி கூட்டம்
மானாமதுரை நகராட்சி கூட்டம் நடந்தது.
மானாமதுரை,
மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். நகராட்சி கமிஷனர் சக்திவேல் வரவேற்றார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- தி.மு.க. கவுன்சிலர் சோம சதீஷ்குமார்:- நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து, மக்கள் நாய் கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். தி.மு.க. கவுன்சிலர் வேல்முருகன், அ.தி.மு.க. கவுன்சிலர் தெய்வேந்திரன்:- நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு வீட்டு வரி ரசீது போடப்படாமல் உள்ளதால் ஏராளமானோர் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் கூடுதலாக கட்டி வருகின்றனர். ஆகவே உடனடியாக ரசீது போடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தலைவர் மாரியப்பன் கென்னடி:- அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வீட்டு வரி ரசீது போடப்பட்டு வருகிறது. பா.ஜ.க. கவுன்சிலர் நமகோடி:- எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித பணிகளும் நடக்காமல் உள்ளது.
தலைவர் மாரியப்பன் கென்னடி:- 26 வார்டுகளில் எந்தவித பிரச்சினையும் இல்லை. உங்கள் வார்டில் மட்டும் தொடர்ந்து குறைகளை கூறிக்கொண்டே உள்ளீர்கள். அனைத்து வார்டுகளும் சமமாகதான் பார்க்கப்படுகிறது. நகராட்சிக்கு தற்போது நிதி வந்துள்ளது. அனைத்து வார்டுக்கும் சமமாக பிரிக்கப்பட்டு தேவையான பணிகள் நடைபெறும்.
தி.மு.க. கவுன்சிலர் மாரிக்கண்ணன்:- நகராட்சியின் சார்பில் கவுன்சிலர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். சோமநாதபுரம் அக்ரஹாரம் பகுதி வழியாக இறுதி ஊர்வலங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். தி.மு.க. கவுன்சிலர் இந்துமதி:- ராம்நகர் பகுதியை நகராட்சியோடு சேர்க்க வேண்டும் இவ்வாறு விவாதம் நடந்தது.